தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை இணைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அவர்கள் இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், சங்கரன்கோவில் வட்டத்திலிருந்த இளையரசனேந்தல் பிர்க்கா கடந்த 2008ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டது. வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைத்த நிலையில், தொடக்கக்கல்வித்துறை, மின்வாரியம், ஊராட்சி ஒன்றியம் ஆகியவை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு, உதயமான தென்காசி மாவட்டத்துடன் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் இணைக்கப்ட்டதால், இளையரசனேந்தல் பிர்க்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது தேவைகளுக்கு தென்காசி மாவட்டத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. இளையரசனேந்தல் பிர்க்காவை முன்பிருந்ததுபோல் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்: தமிழ்நாடு தேர்வுத் துறை உத்தரவு