தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்துவரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் உயரம் தாண்டுதலில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் தரமற்றதாக உள்ளதாகவும்; உடனடியாக அதனை மாற்ற வேண்டும் எனவும் பெற்றோர் பலர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தரமற்றதாக கூறப்படும் மெத்தைகளை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் தருவை மைதானத்தில் 'முதலமைச்சர் கோப்பை'க்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் சிலம்பம், உயரம் தாண்டுதல், கபடி, கூடைப்பந்து, கைப்பந்து எனப் பல பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற உள்ளனர். உயரம் தாண்டுதல் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவினர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இதில், பங்கு பெற்ற ஒரு வீராங்கனையின் பெற்றோர் கூறுகையில், உயரம் தாண்டுதலில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் தரமற்றதாகவும், அதில் வீரர்கள் தலைகீழாக குதிக்கும்போது கழுத்துப் பகுதியில் அல்லது கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் குற்றம்சாட்டினர். எனவே, உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயரம் தாண்டுதலுக்கான தரமான மெத்தையை அமைத்து விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாக்க வேண்டும் என வீராங்கனையின் பெற்றோர் கோரிக்கை விடுத்தார். இதே கோரிக்கையை பலரும் முன்வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு துறை அதிகாரியிடம் நேற்று (பிப்.21) தொலைபேசியில் தொடர்புகொண்டு, தரம் இல்லாத மெத்தையை பயன்படுத்துகிறீர்கள். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என கேள்வி எழுப்பியதற்கு? 'எப்போதும் அந்த மாணவ, மாணவிகள் அதே மெத்தையில் தான் பயிற்சி மேற்கொள்வதாகவும்; அதனால் தான், இன்றைக்கும் அதே மெத்தையை பயன்படுத்துவதாகவும்' பதிலளித்தார்.
மேலும், இதுகுறித்து தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, 'இது சம்பந்தமான புகார்கள் தங்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. உடனடியாக மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்புகொண்டு அதை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவில்லை.. 15 நிமிடம் போராடி தப்பித்தேன்.. எல்லாம் தப்பா பேசுராங்க.. கொடுமையை விளக்கும் பெண்..