தூத்துக்குடி: இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மஞ்சள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து மஞ்சள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
வாகன சோதனை
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு அதிக அளவில் விரலி மஞ்சள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு, உள்ளூர் காவல்துறை, கியூ பிரிவு உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் இருந்து மஞ்சள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வாகனத்தை விரட்டி பிடித்த போலீஸ்
இதனையடுத்து எட்டயபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து வந்த மினி வேனை காவலர்கள் மறித்த போது நிற்காமல் சென்றது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அதன் பின் அந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில், சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விரலி மஞ்சள் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டுநர் ஹக்கிம் சுல்தான், அவருடன் வந்த இப்ராஹீம் ஷா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல்!