தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பரப்புரை மேற்கொண்டார். திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், வழியாக தூத்துக்குடி வந்த அவர் குரூஸ் ஃபெர்னாண்டஸ் சிலை முன்பு பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய மக்களை ஏதோ தீவிரவாதிகளைப் போல் மத்திய, மாநில அரசுகள் சுட்டுக்கொன்றனர். வேதாந்தா குழுமத்தின் எடுபுடிகள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். இங்கே தமிழகத்தில் இருப்பது மோடியின் எடுபிடி எடப்பாடி கம்பெனி.
இதுபோல் திமுக மதச்சார்பற்ற கூட்டணி என்று அவர்களின் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளார். உண்மையில் அது 2ஜி ஊழல் கூட்டணி. ஸ்டாலினை யாரும் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
சேலம் எட்டு வழிச் சாலைக்காக மக்களை, விவசாயிகளை பாடுபடுத்தினார் எடப்பாடி பழனிசாமி. 6,000 ஏக்கர் விவசாய நிலத்தை அங்குள்ள விவசாயிகளை கஷ்டப்படுத்தி அவர் பிடுங்கினார். போக்குவரத்து தொழிலாளர்கள் அவர்களின் தேவைக்காக போராடினால் கைது செய்யப்படுகிறார்கள். பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளதுதான் திமுக. ராகுல் காந்தி அறிவு முதிர்ச்சி இல்லாதவர் என பேசிவிட்டு இப்போது, ராகுல்தான் பிரதமர் என ஸ்டாலின் பேசிவருகிறார். இந்தக் கூட்டணி டுபாக்கூர் கூட்டணி. ஏமாற்றுக் கூட்டணி.
அதிமுக கூட்டணி அடிமைக் கூட்டணி. அதிமுக, திமுக எல்லாம் அரசியல் வியாபாரிகள். திமுக எங்களது நிரந்தர எதிரி. பாஜகவுடன் வாழ்நாள் முழுவதும் கூட்டணி கிடையாது. திமுகவினர் ருசி கண்ட பூனைகள். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நியாயம் வழங்கிட அந்த குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.