தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன் 6) அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அரசு அறிவிப்பு
அதில், "பெரு வணிக நிறுவனங்கள், டாஸ்மாக், போக்குவரத்து, தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் தவிர்த்து சுயதொழில் புரிபவர்கள், எலக்டீரிசீயன், பிளம்பர் போன்றோர் தொழில் செய்ய இ-பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோ, கார், டாக்ஸி போன்றவைகளும் இ-பதிவு முறையை பின்பற்றி அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது".
அரசு அலுவலகங்கள் 30 விழுக்காடு ஊழியர்கள் கொண்டு இன்றுமுதல் (ஜூன் 7) பணி செய்யவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 விழுக்காடு பேருக்கு பத்திரப்பதிவு நடத்தவும் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று காலைமுதல் டோக்கன் முறையில் பத்திரப்பதிவு நடைபெற்றது. பத்திரப்பதிவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் அரசின் கரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
பத்திரப்பதிவு மந்தம்
ஆனால் பேருந்து போக்குவரத்து இல்லாததாலும், வெளியூர் பயணங்களுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாலும் பத்திரப்பதிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கைல் பத்திரப்பதிவுக்கு ஆட்கள் வந்திருந்தனர்.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளைத் தொடர்ந்து, தூத்துக்குடி நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து இன்று காலைமுதலே கணிசமாக அதிகரித்துள்ளது.
கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் மீறாமல் நடந்துகொள்வதற்காக காவல் துறை சார்பில் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.