மத்திய பாஜக அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி சிதம்பரம் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரசல் தலைமை தாங்கினார், நிர்வாகி கதிர்வேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் விரோதப் போக்கினைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை கொண்டு மூர்க்கத்தனமாக, தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு வழி செய்யும் வகையில் மத்திய அரசு சட்டங்கள் இயற்றி வருகிறது. தொடர்ந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அளவுக்கு சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அதேசமயம் விவசாய சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான சட்ட திருத்தத்தையும் அமல்படுத்துவதன் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இன்றைய தினம் நாட்டின் இரண்டாவது பாதுகாப்பு அரணாக விளங்கும் துறைமுகங்களில் தனியார் முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த உள்ளனர். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். துறைமுக தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், பணியும் கேள்விக்குறியாகும்.
எனவே தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற மூர்க்கத்தனம் கொண்டிருக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். உடனடியாக மத்திய அரசு தொழிலாளர், விவசாயிகளின் மீதான விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகளில் ரூ. 500 கோடி - மலைக்க வைக்கும் பிரதமர் மோடியின் பயண செலவு!