தூத்துக்குடி: அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளைச் சார்ந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி 386 மாலுமிகள் உட்பட 700 பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டது. 125 நாட்கள் 25 நாடுகளுக்கு செல்லும் இந்த கப்பல் கடந்த 28ஆம் தேதி கொச்சியில் இருந்து புறப்பட்டு இன்று காலை தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது.
தமிழர்களின் முறைப்படி மங்கள வாத்தியம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்ற பாரம்பரிய மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலானது, 672 அடி நீளம், 92அடி உயரம், 13 அடுக்குகளுடன் 413 அறைகள் மற்றும் நீச்சல் குளம், நூலகம், பூங்கா உள்ளிட்டப் பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளது.
இந்த கப்பலில் உள்ள பயணிகள் இன்று தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம், திருநெல்வேலியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆலயங்கள் உள்ளிட்டப் பல்வேறு இடங்களைப் பார்வையிடுகின்றனர். இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதன்முறையாக அமிரா என்ற சுற்றுலா கப்பல் 700 பயணிகளுடன் 386 மாலுமிகளுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர்.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து இன்று (ஜன.11) மாலை 5 பேர் இந்த கப்பலில் செல்லவுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு சமுத்திர சேது என்ற திட்டத்தின்கீழ் கோவிட் நேரத்தில் இலங்கை, ஈரான் போன்ற பகுதிகளில் இருந்து 2ஆயிரம் பேர் வந்தனர்.
மேலும், பல்வேறு நாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கப்பலில் வர பெர்த் வசதி ஏற்பாடு செய்து தயார் நிலையில் உள்ளது. தற்போது இலங்கை பயணிகள் கப்பல் இரண்டு மாதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஆரம்ப தான். இன்னும் பல்வேறு கப்பல்கள் வர வாய்ப்பு இருக்கிறது’ எனவும் கூறினார்.
இதையும் படிங்க: TN Assembly: சோலார் மையமாகும் தமிழ்நாடு மாவட்டங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!