தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பதற்கு தமிழ்நாடு அரசு மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. அதன்படி, தென்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகளை மூத்த ஐஏஎஸ் அலுவலர் கருணாகரன் ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் இன்று ஆய்வு செய்த அவர், கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் முன்னிலையில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாகரன், "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 18 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், 13 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட 9 பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மாவட்ட நிர்வாகம் தன்னார்வலர்கள் மூலம் செய்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அரசு காட்டிய வழிமுறைகள், கட்டுப்பாடுகள் தொடரும்", என்றார்.
இதையும் படிங்க: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழ்நாடு அரசு!