தூத்துக்குடி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, செக்காரக்குடி, சவலாபேரி, ஒட்டநத்தம், ஓசனூத்து உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்
நடைபெறுகின்ற தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் இந்த தேர்தலை சில சூழ்ச்சிக்காரர்களால் நாம் சந்திக்கின்றோம். நீங்கள் எல்லாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர் பேராசை காரணமாகவும், சுயலாபத்திற்காகவும் வெளியில் சென்று விட்டதால் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலை சந்திக்கிறோம். அந்த பேராசை பிடித்தவர்களுக்கு இந்த தேர்தல் மூலமாக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஏழை, எளிய நடுத்தர மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. சில பேர் வேண்டுமென்றே இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் , கட்சியை உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதற்காக துரோகம் விளைவித்தனர். டி.டி.வி. தினகரனுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் விலாசத்தைத் தேடிக் கொடுத்தது. ஆனால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தவர்தான் டிடிவி தினகரன்.
அதுபோல் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ரகசிய உடன்படிக்கை வைத்துக்கொண்டு இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து கொண்டு அதிமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த நெருக்கடிகளில் இருந்து நீங்கள் தான் இந்த கட்சியை காப்பாற்ற வேண்டும். இது மக்களுடைய கட்சி. நான்
உங்கள் வீட்டில் ஒருவராக இருக்கின்றேன். இங்கு நான் முதலமைச்சர் இல்லை. நீங்கள் தான் முதலமைச்சர். நீங்கள் சொல்லுகின்ற பணியை நான் செய்கின்றேன். ஆனால் அவர்கள் எல்லாம் அப்படி அல்ல.
திமுக தலைவர் ஸ்டாலின் நான்தான் தலைவர் என்று கர்வம் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல டிடிவி தினகரன் இந்த இயக்கத்தை உடைத்து ஆட்சியைக் கவிழ்த்து அதன் மூலமாக ஆதாயம் தேட துடிக்கின்றார். எங்களின் எண்ணமெல்லாம் அப்படி அல்ல.
ஸ்டாலின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். 4 நாட்கள் வெயிலில் அலைந்ததை கூட தாங்காத அவர் 40 நாட்கள் வெயிலில் கிடந்தால் பதவியே வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார். எனவே அப்படிப்பட்ட தலைவர்களுகெல்லாம் இங்குள்ள மக்களின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியாது.
எல்லா குடும்பத்தினருக்கும் தைப்பொங்கல் அன்று ஆயிரம் ஆயிரம் ரூபாய் வழங்கினோம். அதுபோல ஏழை, எளிய விவசாய மக்களுக்கு 2000 ரூபாயை வழங்கினோம். ஆனால் இதற்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டனர். இந்த தேர்தல் முடிந்ததும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் 2000 ரூபாயை இந்த அரசு வழங்கும்.
கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு மனை வழங்கப்படும். மேலும் வீடு இல்லாதவர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயத்திற்கு முக்கியமானது நீர். இதற்காக நீர் வீணாகும் தமிழ்நாடு முழுவதும் இடங்களை பொறியாளர்கள் வைத்து ஆராய்ந்து அவ்விடங்களில் மழைநீரை சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இதற்காக குடி மராமத்து பணிகள் கொண்டு வந்து தமிழ்நாடு முழுவதும் 3000 குளங்கள் தூர்வாரபட்டிருக்கின்றது. தொடர்ந்து ஏரிகள் அனைத்தும் முழுவதும் தூர்வாரப்படும். இந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குளங்களும் ஏரிகளும் தூர்வாரப்படும்.
ஆறு, நதி மூலமாக கடலில் உபரியாக கலக்கும் நீரை தடுப்பதற்கு நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ரூ.1000 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வல்லநாடு பகுதிகளில் 12 கோடி செலவில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் இதன் மூலம் இங்குள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவார்கள்.
கிராம மாணவர்களுக்கு சிறப்பான கல்வி தர வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி இலவச சீருடை, காலணி, புத்தகப்பை, மிதிவண்டி, மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 39 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல எல்லா கிராமங்களிலும் கூடிய விரைவில் இணையதள வசதியை ஏற்படுத்த உள்ளோம். எனவே யாரும் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது. யார் நல்லது செய்கிறார்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். அந்த ஆட்சி தான் நிலைத்து நிற்கும். அந்த நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கிறோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தயாநிதி குடும்பத்தினரிடமும் தான் 40 டிவி சேனல்கள் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் கேபிள் கட்டணத்தை காரணம் காட்டி குறை சொல்லி வருகின்றனர். அவர்கள் கேபிள் கட்டணத்தை குறைத்தால் கேபிள் கட்டணம் தானாகவே குறைந்துவிடும்.
நடைபெறுவது இடைத்தேர்தல் தான். பொது தேர்தல் அல்ல. ஆகவே மக்களை ஏமாற்றி பொய் தேர்தல் அறிக்கை வெளியிட்டு உங்களிடம் ஓட்டுகளை பெறுவதற்காக அரசியல் நாடகமாடுகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இருப்பினும்
இந்த அரசு மத்திய அரசிடம் எடுத்துக்கூறி அரசு கேபிள் டிவி கட்டணத்தை பழையபடியே 100 ரூபாய் இருக்கும் படி நடவடிக்கை எடுக்கும்.
தயாநிதி மாறன் குழுமமும், திமுக தலைவர் ஸ்டாலினின் குழுமமும் தான் அனைத்து டிவி சேனல்களையும் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணத்தை உறிஞ்சி அவர்களின் கஜானாக்களை நிரப்பி கொண்டுள்ளனர். அதை தடுக்கிற அரசியல் கட்சியாக எங்களது கட்சியும், ஆட்சியும் இருக்கும் என்றார்.
Visual reporter app.