தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், வெள்ளப்பட்டி, தாளமுத்துநகர், சோட்டையன் தோப்பு, ஏ.பி.சி. கல்லூரி ஆகிய பகுதிகளில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மத்தியில் நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய ஆட்சி விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை என்றும், மீனவர்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு திணிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணமான இந்த மத்திய - மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பக் கூடிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் தூத்துக்குடியில் மீனவர்களுக்கு தூண்டில் வளை தரப்படும் என்றும், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாக மூடப்படும் என வாக்குறுதி அளித்தார்.