தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறு தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், விவிபேட் எந்திரம் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணி அந்தந்தத் தொகுதிக்குள்பட்ட தொகுதித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்றுவருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து கண்காணிக்க சிறப்புப் பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பாக விளம்பரங்கள் செய்வதற்கும் கட்சியின் சார்பில் சுவரொட்டிகள் ஓட்டுவதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, அதன்படி விளம்பரங்கள் செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு அரசியல் கட்சியினருக்கும், அச்சக உரிமையாளர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்.
ஒரு தொகுதிக்கு 20 இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முறையான ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 630 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இது தவிர கட்சியினருக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்ட வேட்டிகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: விடியலுக்கான முழக்கம்! - திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடிதம்