ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது தசரா திருவிழா நடைபெறும். தசரா திருவிழாவிற்கு புகழ்பெற்ற மைசூர் நகரத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினம் பகுதியில் தசரா திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு மாலையணிந்து அம்மன், காளி, ஆஞ்சநேயர் மற்றும் குரங்கு போன்ற பல்வேறு வேடங்கள் அணிவது இத்திருவிழாவின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, கொடிமரப்பூஜைப் பொருட்களுடன் ஊர்வலம் நடத்தப்பட்டு செப்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் விரதமிருந்து மாலையணிந்த பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். காப்புகட்டிய பிறகே வேடங்கள் அணிந்து தனியாகவோ அல்லது குழுவாகவோ பல்வேறு கிராமங்களுக்குச் சென்று காணிக்கை வசூல் செய்து, அந்த காணிக்கையை இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ஆம் நாள் திருவிழாவன்று கோயில் உண்டியலில் செலுத்துவார்கள்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8ஆம் தேதியன்று நள்ளிரவு நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்கலாமே: தசரா கொண்டாட்டத்திற்கு தயாராகும் மைசூரு தர்பாரின் அரிய வகை புகைப்படங்கள்!