தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சந்தை ரோடு மற்றும் கால்டுவெல் காலனி பகுதியில் அம்மா மினி கிளினிக்குகள் இன்று (டிச.30) தொடங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு அம்மா மினி கிளீனிக்குகளை திறந்துவைத்தார். மினி கிளீனிக்குகள் திறப்பு நிகழ்ச்சிக்காக காலையிலிருந்தே மாநகராட்சி பணியாளர்கள் மும்முரமாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திறப்பு விழாவின்போது கர்ப்பிணி தாய்மார்கள் மூன்று பேருக்கு தமிழக அரசின் மகப்பேறு உதவி பெட்டகம் வழங்குவதற்காக உதவி பெட்டகங்கள் தயார்படுத்தப்பட்டிருந்தன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கர்ப்பிணிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் மூன்று பேரும் பிற்பகல் 2.45 மணிக்கெல்லாம் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
காத்திருந்த கர்ப்பிணிகள்...
அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என நேரம் குறிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு 3.45 மணிக்கு மினி கிளீனிக்குகள் திறந்து வைப்பதற்காக அமைச்சர் வருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, சுகாதார அலுவலகத்தில் வெட்டவெளியில் போடப்பட்டிருந்த இருக்கைகளில், கர்ப்பிணி தாய்மார்கள் மூன்று பேரும் அமைச்சரின் வருகைக்காக வெகு நேரமாக காத்திருந்தனர்.
தாமதமாக வந்த அமைச்சர்
நேரம் செல்லச் செல்ல கர்ப்பிணி பெண்கள் மூன்று பேரும் இடுப்பு வலியால் இருக்கையில் அமர முடியாமல் மனம் புழுங்கி கொண்டிருந்ததை அங்கிருந்தவர்களால் பார்க்கமுடிந்தது. மாலை 4.30 மணி ஆகியும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அங்கு வராததால், மனம்நொந்த கர்ப்பிணி ஒருவர் தன்னால் வெகு நேரமாக இருக்கையில் அமர முடியவில்லை என செவிலியரிடம் கூறிவிட்டு இடுப்பை பிடித்தவாறே அங்கிருந்து சென்றுவிட்டார்.
தொடர்ந்து 2.45 மணிநேரம் காலதாமதமாக, மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறும் இடத்திற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, மினி கிளீனிக்கை திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவி பெட்டகங்களை வழங்கினார்.
இதையும் படிங்க:'சாதிப்பதற்கு தாய்மை தடையில்லை' - 10 கி.மீ, 62 நிமிடம்... வியக்க வைத்த கர்ப்பிணி