தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அவரோடு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோரும் கரோனா தடுப்பூசி எடுத்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "கரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டாலும் அனைவருமே கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துகள் இரண்டு தனியார் மையங்கள் உள்பட 17 இடங்களில் செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் தினசரி சராசரியாக 100 பேர் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்துகள் பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே 630 மருத்துவ பணியாளர்கள் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட மூன்றாயிரத்து 840 பேர் நலமாக உள்ளனர்.
இன்று முதல் கூடுதலாக முன் களப்பணியாளர்கள் தடுப்பு மருந்தை எடுக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தடுப்பு மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு காவல்துறையினருக்கும் செலுத்தப்படும். அதன்பின்னர் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்” என்றார்.