தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரின் கால்டுவெல் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த செப்டம்பர், 2022-ல் திருமணம் நடந்துள்ளது. M.Sc, M.Phil பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கணேஷ் சுஜாதாவை வேலைக்குச் செல்ல வேண்டாம் எனவும் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்றிரவு திடீரென இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இன்று (அக்.3) காலையில் கணவன் எழுந்து பார்த்தபோது, அறைக்குள் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், எழுப்பிய சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்குத் திரண்டனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றியதோடு, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியையின் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருமணமாகி ஓராண்டே ஆகிய நிலையில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, சென்னையிலிருந்து வரவுள்ள சுஜாதாவின் குடும்பத்தினரிடம் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நரிக்குறவ சமுதாய மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம்..!