சென்னை, வடமாநிலங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பியவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவினால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே, மாவட்டத்தில் கரோனா பாதித்த 10 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இளம்புவனம், பாண்டவர்மங்கலம், மழவராயநத்தம், ஆதனூர் ஆகிய நான்கு பகுதிகளும் தற்போது கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாறியுள்ளன.
இப்பகுதியிலிருந்து கரோனா பாதிப்புடன் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மழவராயநத்தத்தைச் சேர்ந்த ஆண், ஆதனூரைச் சேர்ந்த பெண் என இரண்டு பேர் பூரண குணமடைந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் இருவரையும் வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இந்த இருவரும் தொடர்ந்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 பேரும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்!