தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் கன முதல் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்து மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
இதனால் மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் வீடுகளை இழந்து தவித்து வந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழை காரணமாகவும், குளம் போன்ற நீர்நிலைகள் உடைந்து வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாகவும் பல்வேறு போக்குவரத்து முடங்கியது.
மேலும், தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகரில் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய தண்ணீரால், பல பகுதிகளில் சாலைகள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் குடிநீர் குழாய்கள் என பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.
அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் நகரம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து, தீவு போல காட்சி அளித்தது. திருச்செந்தூரில் இருந்து முக்கிய சாலையான தூத்துக்குடி சாலை மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி சாலைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடியதாலும், பல்வேறு பகுதிகளில் சாலை உடைப்பு ஏற்பட்டதாலும், அனைத்து சாலைகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மேலும், நெல்லை போக்குவரத்துக் கழகத்தில் நாள்தோறும் 5 ஆயிரத்து 60 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கடந்த 5 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்குப் பிறகு திருச்செந்தூர் முதல் தூத்துக்குடி வரை நேர்வழியில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூர், திருநெல்வேலி இடையிலான சாலையில் பேருந்துகள் குரும்பூர் வழியாகச் சென்று நாசரேத், பால்குளம் வழியாக, ஆழ்வார் திருநகரி சென்று திருநெல்வேலி செல்கிறது. மேலும், கன்னியாகுமரி - நாகர்கோவில் இடையே பேருந்து சேவையும் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியரின் 2வது மனைவிக்கும் ஓய்வூதியம் பெறும் உரிமை: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு