தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தற்போது அதிகரித்துவருகிறது. தினசரி கரோனா பாதிப்பு என்பது 28 ஆயிரத்தைக் கடந்த நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் தாயார் ஞானக்கம்மாள் (92) உசிலம்பட்டியில் வயது மூப்பின் காரணமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யும்பொருட்டு தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தத்தில் அவருடைய சொந்த இடத்தில் தாயாரின் உடலுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினார். இதையடுத்து அவருக்கு லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்ட அவர், கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.