மத்திய அரசின் ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் தொடங்கி கடலோரங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டம் முத்தயபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்க்காடு, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே அவ்வபோது ஐஓசிஎல் நிறுவனத்தினர் அத்துமீறி இழப்பீடு பெறாத விவசாயிகளின் நிலங்களில் வழியேயும் எரிவாயு குழாய் பதிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கும் ஐஓசிஎல் நிறுவன அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று (செப்.3) காலை குலையன்கரிசல் ஊரிலுள்ள ஆஸ்கர் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தின் வழியே எரிவாயு குழாய் பதிப்பதற்காக ஐஓசிஎல் நிறுவனத்தினர் குழாய்களை அவருடைய நிலத்தில் இறக்கி வைத்து சென்றனர்.
ஆனால் விவசாயி ஆஸ்கர் ஐஓசிஎல் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு எதுவும் பெறாத நிலையில் நிலத்தின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஓசிஎல் அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.