தூத்துக்குடி : தொழில் துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பணிகள், மதிப்பீடு விவரம், பணிகளின் தற்போதைய நிலை, திட்ட வரையறைக்கான கால அளவு, எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி., ”தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தொழில் வளர்ச்சி திட்ட பணிகள், மாவட்ட வளர்ச்சி சார்ந்து புதிய தொழிற்சாலைகளை அமைத்தல், அதன் மூலமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இன்று (ஜூலை.11) ஆலோசிக்கப்பட்டுள்ளது.
![வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01b-industrial-development-meeting-vis-script-tn10058_11072021151650_1107f_1625996810_996.png)
தொழிற்பூங்கா அமைக்க திட்டம்
தூத்துக்குடி மாவட்ட சிப்காட் வளாகத்தில் முதல்கட்டமாக மரப்பொருள்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து உணவு சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
![ஆலோசனைக் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01b-industrial-development-meeting-vis-script-tn10058_11072021151650_1107f_1625996810_999.png)
அதிகமான வேலைவாய்ப்பு
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தூத்துக்குடியை பொறுத்தவரையில் இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய தொழிற்சாலைகளை அமைத்து வளர்ச்சியை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க:
விதிமுறைகளை மீறி பேருந்து பயணம்: பயணிகளுக்கு கரோனா பரிசோதனை!