தூத்துக்குடி: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு மின்னஞ்சல் வாயிலாக இந்த செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது, “ஜனவரி 2 முதல் 5 வரை உள்ள தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 - 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சுழற்காற்று வீசக்கூடும். இதனால் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 2 சப் இன்ஸ்பெக்டர்களின் சஸ்பெண்ட் உத்தரவை நீக்க வேண்டும் - காவல்துறைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்களின் படகுகளை உயரமான மற்றும் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைப்பதுடன், தங்களின் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.4) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மேலும், மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும், 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரொக்கம் எங்கே? - ரூ.2 ஆயிரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
முன்னதாக, வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப் போனது.
குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதங்களை எதிர்கொண்டது. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதி நடைபெறாததால், பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் தடையை மீறி மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!