பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்கவை தாக்கல் செய்தபின், மசோதா நிறைவேறியது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வஉசி கல்லூரி முன்பு 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜாய்சன் கூறுகையில், இன்றைக்கு மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய பாஜக அரசானது தொடர்ந்து இந்தியாவை சீரழிக்கக் கூடிய வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. புதிய கல்வி கொள்கையில் ஆரம்பித்து பல்வேறு கட்ட சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.
அதிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரே மாதத்தின் முகம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான ஏற்பாட்டை இந்த மசோதா செய்வதாக உள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது ஒரு மதத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு நவீன தீண்டாமை கொடுமையாகும். எனவே, மத்திய அரசாங்கம் உடனடியாக இந்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இல்லை எனில் இது இந்தியா முழுவதற்கும் இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.
இதேபோன்று திருவாரூரில் அரசுக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: CAB2019 இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் - மோடி ட்வீட்