தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கும், ராமலெட்சுமி என்பவருக்கும் கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு கல்பனாதேவி, தங்க திலகவதி, சுவேதா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கரடிகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரும் பாலசுப்பிரமணியனும் உறவினர்கள் ஆவர். கருப்பசாமி, மும்மலைப்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால், அடிக்கடி பாலசுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பற்றி அறிந்த பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலசுப்பிரமணியன் காவல்துறையின் உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்று மேலப்பாறைப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின் சிறையில் இருந்து வெளியே வந்த பாலசுப்பிரமணியன், தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் வீட்டில் மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லமால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பாலசுப்பிரமணியன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி புகார் மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
போராட்டம் குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், "தனது மனைவி, குழந்தைகளுடன், வீட்டில் இருந்த 26 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள், ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை கருப்பசாமி எடுத்து சென்றுவிட்டார்.
கடந்த 8ஆம் தேதி அந்த கருப்பசாமியுடன், சில காவல் அலுவலர்கள் வந்து என்னைத் தாக்கினார். இதில் எனக்குத் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் 12ஆம் தேதி வரை சிகிச்சை பெற்றேன். ஆனால், மருத்துவமனை பதிவேட்டில் விபத்து சிகிச்சை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கியும், மேலும் விசாரணை நடத்தி, எனக்கு என் குடும்பத்தை கருப்புசாமிடம் இருந்து மீட்டும் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்க: குடியிருப்புப்பகுதி அருகே இருந்த ஆண் சடலத்தால் பரபரப்பு!