நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி முழுமையான சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது வழக்கு போடுவது கண்டனத்திற்குரியது. இது கருத்து சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதல் ஆகும். பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக வழக்கு போடுவது என்றால் இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசுகையில், தேர்தல் என்பது வியாபாரமாகி விட்டது. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இன்னும் தேர்தலில் நிறைய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தேர்தலின் போது காவல்துறையின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது எனக் கூறினார்.
மேலும், அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலேயே வெற்றிடம் என்பது கிடையாது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரின் அரசியல் பிரவேசம் குறித்து கராத்தே தியாகராஜன் விமர்சிப்பது தேவையற்றது என்றார்.
இதையும் படிங்க: ‘பேனர் வைப்பதில் காட்டும் மும்முரத்தை நீட் விவகாரத்தில் காட்டியிருக்கலாம்’ - கனிமொழி