தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பருவ மழை காலங்களில் மழை பெய்யாமல் போனாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மழை வேண்டி பல்வேறு விதமாக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரம் கிராம மக்கள் அந்த கிராமத்தின் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைத்து மழையை வேண்டியுள்ளனர்.
குறிப்பாக உண்மையான திருமணம் எப்படி நடக்குமோ அதைப்போல் நடந்தி கவனத்தை ஈர்த்துள்ளனர். திருமணத்தின் அலங்கார வரவேற்பு முதல் 18 தாம்புலத்தில் பழ வகைகள், கற்கண்டு, சாக்லெட், பூ, பட்டு போன்ற பொருட்கள் வரை இடம்பெற்றன. இந்த சீர்வரிசைகளை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் மேளதாளம் முழங்க எடுத்து வந்தனர்.
அதன்பின், கோயிலில் உள்ள முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது. அதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு, யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மரத்திற்கு முன்பு நாகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இறுதியாக மஞ்சளாலான மாங்கல்யம் மரத்துக்கு கட்டப்பட்டது. அப்போது பொதுமக்கள் கூடி குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதன்பின் பொதுமக்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இந்த விழாவில் திருமண உணவு போலவே வடை, பாயாசத்துடன் விருந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதிக்கு கோடிகளில் குவியும் கிப்ட்ஸ்