தூத்துக்குடி: காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விதவை பெண்ணான பாப்பா (47), என்பவரை கடந்த 2.11.2007 அன்று அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்தனர். அப்போது பாப்பா மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் மூலம் தனிநபர் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (அக்.28) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த அப்போதைய ஆய்வாளர் மற்றும் அப்போதைய உதவியாளர் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருவருக்கும் கொடுங்காயம் விளைவித்தல் ஏற்படுத்திய குற்றத்திற்காக தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த ரூ.50,000 பணத்தை காவலர்களிடம் இருந்து வசூலித்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண் பாப்பாவுக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிறைவேறிய மாவட்டத்தில் தற்போது காவல்துறைக்கு எதிராக நீதிபதி வழங்கிய தீர்ப்பு தூத்துக்குடி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மாணவி மீது காதல்: நடுரோட்டில் உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்