திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் மேயருமான உமாமகேஸ்வரி குடும்பத்தினருடன் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் திமுக செயற்குழு உறுப்பினர் கருணாகரன் என்பவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்விரு சம்பவங்களாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தான் கொண்டு வரும் மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதாக்களை அனுப்பும் நடைமுறையை பின்பற்றாமல் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக அரசு செயல்படுகிறது. இது ஒரு மோசமான முன்னுதாரணம்' என்றார்.
மேலும், 'தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை குறித்து சட்டப்பேரவையிலும் மக்களவையிலும் திமுக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. அமைச்சர்களும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று சொல்கிறார்களே தவிர நிரந்தரத் தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்வேறு இடங்களில் படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆணவக் கொலைகள் அதிகரித்து கொண்டிருக்கக்கூடிய சூழலையும் காண முடிகிறது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லமுடியும்' என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.