தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவை குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்.1 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார்(31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர்(22), அதிசய பரலோக திரவியம்(25), மதுரையை சேர்ந்த மாதேஷ் குமார்(15), தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன்(23), ஆதிநாராயணன்(20), மகேஷ்குமார்(24), சிலுவை பட்டி பகுதியை சேர்ந்த அன்பு சூசை மைக்கேல்(48), விக்னேஷ்(31) மற்றும் மணி, சக்தி என மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது, கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடந்த 20.10.2023 அன்று திசைமாறி 'மாலத்தீவு' கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல்படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் அங்கு சிறை பிடிக்கப்பட்டு 7 நாட்களுக்கு பின் தான் மீனவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிந்துள்ளது.
இது குறித்து மீனவர் ஆதி நாராயணனின் தாயார் விஜயலெட்சுமி நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'கடந்த 1ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில், அருகே இருக்கின்ற தீவுக்கு போன நிலையில், அந்நாட்டு கடற்படை பிடித்து விட்டனர். பின்னர், அங்கிருந்து ஒரு பெண் கால் செய்து பேசினார். உங்கள் பையன் சேஃப்டியாக இருக்கிறான். ஃபார்மால்டிஸ் முடிச்சிட்டு ஊருக்கு அனுப்பித்து விடுகிறோம் என்றார்கள்.
இரண்டு முறை என் பையனை எப்பொழுது விடுவீர்கள் என்றேன். அதற்கு எப்போது என்று நாங்கள் சொல்ல முடியாது. அனுப்பிவிட்டு விடுவோம் என்றார் அந்த பெண். ஆகவே மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக படகையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்' என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் புகழ் செல்வமணி நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'தருவைக்குளம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து அக்.1ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க 12 மீனவர்கள் சென்றனர். அப்போது, 18 நாட்கள் கழித்து மத்திய, மாநில அரசுகளின் வானிலை அறிவிப்பின் காரணமாக இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகு தென் அரபிக்கடலுக்குள் சென்றது. இங்கு அடிக்கடி மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று இருக்கின்றனர். அதனால், இம்முறை மீன்பிடிக்க அங்குச் சென்ற நிலையில், திடீரென மாலத்தீவு கடற்படையினர் அதிரடியாக இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி பிடிபட்ட படகு, ஆனால் இந்திய அரசுக்கு 27ஆம் தேதி தான் தெரியவருகிறது. மாலத்தீவில் 12 மீனவர்களையும் கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்து இருக்கிறார்கள். ஆனால், கேட்டால் சித்திரவதை பண்ணவில்லை என்று கூறுகின்றனர்.
தகவல் தெரிந்தவுடன் மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்பிக்கள், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவர் மூலமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு தகவல் அளித்தோம். மேலும், மத்திய வெளியுவுத்துறை அமைச்சர் கிட்ட பேசி விட்டோம் என்று கூறியுள்ளனர். 12 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை' என்று வருந்தினார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், '3 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, தமிழ்நாட்டு மீனவர்கள் மாலத்தீவு பகுதிக்கு சென்றபோது, அவர்களின் உரிமங்களை முறையாக ஆய்வு செய்த பின்னர் மாலத்தீவு அரசு, அவர்களை விட்டுவிட்டனர்.
ஆனால், இந்திய அரசுக்கும் மாலத்தீவு அரசுக்கும் ஏதோ சில பிரச்சனைகள் நிலவுவதால், மாலத்தீவு அரசு பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோன்று இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் முதல்முறையாக இறங்கியுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனையில் அப்பாவி தொழிலாளர்களும், மீனவர்களும் இதுபோன்று பாதிப்படையக் கூடாது. பிடிபட்ட விசைப்படகு ரூ.1.50 கோடி மதிப்புடையது. இதற்கு 50% மானியம் என வெறும் ரூ.30 லட்சம் மட்டும் அரசிடமிருந்து பெற்று மீதமுள்ள ரூ.1.20 கோடியை அங்குமிங்குமாக கடன் பெற்றுதான் இந்த விசைப்படகை வாங்கினர். இது தொடர்பாக எங்கள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி ஜெயபாலன் உள்ளிட்டோர் சங்கத்தின் சார்பாக மாலத்தீவிற்கு விரைந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாலத்தீவு புதிய அதிபரால் இந்திய மீனவர்களுக்கு சிக்கலா? பவளத்தீவில் நடப்பது என்ன?