தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். தொடர்ந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், மாலையில் தூத்துக்குடி மாவட்ட பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற பாரதி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'நான் இன்று பெரிய பொறுப்புடன் இங்கு நின்று பேசுவதற்கு முழுக்காரணம் பாரதிதான். பெண்ணை உயர்த்தி, பெண்மையை போற்றி, தன்னால் எவ்வளவு உயர்த்தி சொல்ல முடியுமோ அவ்வளவு உயர்த்தி கவிதை பாடியவர் கவிஞர் பாரதி. நாடாளுபவர்களை அரசன் என்று சொல்லலாம். ஆனால், இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டவர்களை சக்கரவர்த்தி என சொல்வதுண்டு. அப்படி, பெண்ணை சக்கரவர்த்தியாக சித்தரித்து "சக்கரவர்த்தினி" என்று முதன்முதலாக முடிசூட்டியவர் கவிஞர் பாரதி.
நமக்கு எவ்வளவுதான் எதிர்மறை விளைவுகள் நடந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும்தான் நாம் பார்க்க வேண்டும். மனிதனை, மனிதனாக மதிக்கும் குணம் இருப்பதுதான் எல்லோரையும் சமமாக நடத்தவைக்கும். சமுதாயத்தில் எல்லா பெண்களும் முன்னேறவில்லை. இன்றளவும் சமுதாயத்தில் கீழ்நிலையில் இருக்கும் பெண்கள் முன்னேற துடித்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பு பெண்களாகவும் இருக்க வேண்டும். நம்மை அடக்குபவர்களை தலைநிமிர்ந்து எதிர்க்கவேண்டும்.
தற்போது பொதுச் சமூகத்தில், வீட்டில் இருக்கும் மனைவியை, ஒரு இரும்புப்பிடி போல் சித்தரிக்கிறார்கள். பெண்கள் அப்படி அல்ல. வீழ்வேன் என நினைக்காமல் மீண்டு எழுவேன் என நினைக்கும் போதுதான் பெண்களின் கனவு மெய்ப்படும். பெண்மைக்காக பாரதியின் பாடலை எங்கேயும் சோகமாக பாட முடியாது. இயல்பாகவே புத்துணர்வும், உத்வேகமும் அளிக்கும் வகையிலேயே அவருடைய பாடல்கள் இருக்கும்.
கவலைகளுக்காக, தோல்விகளுக்காக பெண்கள் தற்கொலை முடிவை எடுக்காமல் துணிச்சலாக இருக்க வேண்டும். தோல்விகளுக்கு, நாம் நமது நல்ல வாழ்க்கை மூலமாக பதிலடி கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியாக, துணிச்சலாக வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. ஆகவே பாரதியின் பாடல்படி வீழ்வேன் என நினைக்காதே, நான் மீண்டும் எழுவேன் என உறுதிக்கொண்டு வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்' என்றார்.