தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது 58ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தூத்துக்குடிக்கு இன்று காலை விமானம் மூலம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கி தமிழ்நாட்டை எடுத்துச் செல்ல நினைக்கிறது. நான் தோற்றாலும் தமிழ்நாட்டு மக்களுக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் தேவையானவற்றை செய்வதற்கு பாடுபடுவேன்.
தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட், மீத்தேன் போன்ற திட்டங்களை கொண்டுவந்த திமுகவினர் தற்போது பாஜக மீது பலிபோட பார்க்கிறார்கள். மும்மொழி கொள்கை குறித்து கருத்து கேட்கப்பட்டு அறிக்கை கொடுக்கபட்டுள்ளது. ஆனால், அதற்குள் பாஜக இந்தியை திணிப்பதாக பொய்யாக குற்றச்சாட்டு பரப்பி வருகின்றனர்.
மக்களுக்கு அதிகமான உரிமையோடு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான், பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்த தமிழ்நாட்டு மக்கள் வருந்துவார்கள் என்று கூறினேனே தவிர யாரையும் மிரட்டும் தொனியில் பேசவில்லை.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள், இங்கு சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்வதைப் போன்று அங்கும் வெளிநடப்பு தான் செய்வார்கள். அவர்கள் மக்களுக்கு தேவையான எதையும் செய்யப் போவதில்லை” என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரது பிறந்தநாளையொட்டி அங்கு வந்திருந்த பாஜக தொண்டர்கள் முன்னிலையில் தமிழிசை கேக் வெட்டினார்.