தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு சொத்து வரியைக் குறைக்கவும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2,000 குடும்பங்கள் பயன்பெறும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தினர் வ.உ.சி சாலையில் கூட்டாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் நிறுவனர் சந்திரன் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’தமிழ்நாடு அரசு சொத்து வரியை 10% குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடுமையான மின் கட்டண உயர்வால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அனல் மின்சாரமும், அணு மின்சாரமும், காற்றாலை மின்சாரமும் தயார் செய்யப்பட்டும் வழங்கலாம். இதன்மூலம், தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கணக்கீடு செய்வதை மாற்றி, பிற மாநிலங்களில் வீட்டு உபயோக மின்சாரம் 300 யூனிட் இலவசமாக கணக்கீடு செய்வதுபோல், தமிழ்நாட்டிலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 300 யூனிட் இலவச கணக்கீடு செய்ய வேண்டும்.
அணு மின்சாரம் தயார் செய்யும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், அணு மின் உலை ஆபத்தைத் துணிவாக எதிர்கொள்ளும் தமிழ்நாடு மக்களுக்கு அவர்களின் வீட்டு உபயோக மின் இணைப்பில் 300 யூனிட் இலவச கணக்கீடு செய்வதற்கு மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தென் இந்தியாவின் துறைமுக தொழில் நகரமான தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையினை மீண்டும் அதன் உற்பத்தியைத் தொடங்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நவீன பாதுகாப்போடு மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்ற உத்ரவாதத்துடன் மாநகர மக்கள் சுகாதாரம், வியாபாரம், வேலைவாய்ப்பு, பணப் புழக்கம் ஆகியவற்றைப் பெற ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மத்திய, மாநில அரசுகள் திறக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலனுக்காகவும், வணிகர்கள் நலனுக்காகவும், நிறைவேற்ற மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றால் அடுத்த கட்டமாக கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் ஆர்பாட்டங்கள் நடத்த தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் தீர்மானிக்கிறது’ என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் தாளமுத்து, மாவட்ட பொருளாளர் முத்து, துணைத் தலைவர் எபனேசர் எபி, மாநகர தலைவர் லிங்க செல்வன், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் நெல்லை ஆனந்தன், நிர்வாகிகள் முருகன், ஐயப்பன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி!