தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த மாலுமிகள் சங்கத்தினர் வந்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “ புன்னக்காயலைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி கிப்சன். இவர் கடந்த மே மாதம் மும்பையைச் சேர்ந்த தனியார் கப்பல் கம்பெனி மூலமாக, கப்பல் ஒன்றில் மாலுமியாக ஒப்பந்த பணியாளராகச் சென்றார். இந்நிலையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அவர் சென்ற கப்பல், ஐக்கிய அரபு அமிரகத்தில் விபத்துக்குள்ளானதால் கிப்சன் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவருடைய உடல் மே 22ஆம் தேதியன்று சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து கிப்சனின் இறப்புச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கப்பல் விபத்தில் எப்படி இறந்தார், விபத்து எதனால் நடைபெற்றது என்பதற்கான ஆய்வு அறிக்கைகள் இன்னும் தரப்படவில்லை.
இதைக் கேட்டு பல முறை நாங்கள் மனு அளித்தும் பலனில்லை. கிப்சன் இறப்பு தற்கொலையா, கொலையா அல்லது விபத்தா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இது குறித்து கப்பல் போக்குவரத்து பொது இயக்குநர் விசாரணை நடத்தி உரிய அறிக்கை தரவேண்டும். இல்லையெனில் தென்மாவட்டங்கள் அளவில் கப்பல் மாலுமிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
இதையும் படிங்க: அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன்