தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலை 5, 6ஆவது விரிவாக்க பணிகள் நடைபெறுவதை நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சு.ப.உதயகுமார் தலைமையில் அப்பகுதி மக்கள், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இன்று (ஜூன் 29) மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கூடங்குளம் அனு உலை போராட்டம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரும்பப் பெற்றதற்கு அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
விரிவாக்கத்தை கைவிட வேண்டும்
“கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6ஆவது அணு உலைகளுக்கு முதல் கான்கிரீட் போடும் நிகழ்வை இன்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே முதல் அணு உலை 70 நாள்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு என்று அந்த உலை ஓடும் நாள்களை விட செயலபடாத நாட்கள் தான் அதிகம். இந்நிலையில், இரண்டாவது அணு உலையிலும் தொடர்ந்து பழுது ஏற்பட்டு மே மாதம் மூன்று முறை நிறுத்தப்பட்டது.
திடீரென 5ஆவது, 6ஆவது அணு உலைகளுக்குத் தொடக்க நிகழ்வுகள் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். ஓட்டு மொத்த தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணுக்கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்த தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து விரைவில் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.
மக்கள் கோரிக்கைகளை மதிக்காத அதிமுக:
தொடர்ந்து பேசிய அவர், “ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கே கேடு விளைவிக்கக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதி மீனவ, விவசாய, வணிக பெருங்குடி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறோம். அதிமுக அரசு மக்கள் கோரிக்கைகளை கடுகளவும் மதிக்கவில்லை. இந்த ஜனநாயக விரோத போக்கினால் தான், மக்கள் மனம் தளர்ந்து ஜனநாயக அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
வாழ்வாதார உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்:
தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன், சேலம் - சென்னை எட்டு வழி சாலை உள்ளிட்ட பல மக்கள் விரோத திட்டங்களை தடுத்து எதிர்த்து வருகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் எதிர்க்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் பொறுப்பு. அவர்கள் ஜனநாயகத்தை மதிக்காததால் வந்த வினை தான் இது. ஆனால், நாங்கள் தொடர்ந்து எங்களுடைய வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். தேவைப்பட்டால் களம் இறங்கி போராடுவோம்” என்றார்.
மேலும், “நாங்கள் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இவற்றை திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். 40 ஆண்டுகள் நம்முடைய தலைமுறைக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடுத்து வரும் 400 தலைமுறைகளை அழிப்பதற்குஇடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடாக உள்ளது” என உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலையம்: 5,6ஆவது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமானப்பணி தொடக்கம்