தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள் சங்கம், மக்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சங்கம், இந்து வணிகர் சங்கம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்டவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர்கள் கூறுகையில், "நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. பல இடங்களில் மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் இறக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் வேதாந்தா நிறுவனம் மனிதநேயத்துடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாகத் தருவதாக அறிவித்தது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கம், இந்து வணிகர் சங்கம், மக்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் ஏனைய பிற சங்கங்களின் சார்பில் மனதார வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்திசெய்ய விரைந்து பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு வழங்கி ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஆக்கப்பூர்வ பணிகளைத் தொடங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்த் கூறுகையில், "தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் போராட்டம், கறுப்பு நாள் எனப் போராடுகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை.
இவையெல்லாம் பார்க்கையில் தூத்துக்குடியில் நக்சல்வாதிகள் ஊடுருவிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகள், நக்சல்வாதிகள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்