தூத்துக்குடி: திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை தொடங்குவதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் கலைஞர் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முன்னிறுத்தி விடியலை நோக்கி என்ற பயணம் தொடர்கிறது. மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்கின்ற ஊழல் ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை தமிழ்நாட்டில் தொடர்வதற்கு இந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும்.
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது அவரது சொந்த விருப்பம். அவர், கட்சி தொடங்கி என்ன சொல்லுகிறார் என பார்ப்போம். இதில், மத்திய அரசு தலையீடு உள்ளதா என்பதை அவரது கட்சியில் யார் யார் இணைகிறார்களோ அதைப்பார்த்தால் தெரியும்.
ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு எந்தத் தடையும் இல்லை.
அமலாக்கத் துறை நடவடிக்கை மூலம் பலரை பாஜக தங்கள் கட்சிக்குள் இழுத்துவருகிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை. தமிழ்நாட்டில் பெய்த கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முறையாகச் செய்யவில்லை.
கஜா புயலின்போது சொன்னதை எதையும் செய்யாதவர்கள், தற்போது என்ன செய்யப்போகிறார்கள். கடந்த பத்தாண்டு அதிமுக அரசு ஆட்சியில் இருந்து எதுவும் செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலினை பரப்புரையின்போது கைதுசெய்வதால் அவருக்குப் புகழ்தான் சேர்ந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: போர்க்கால அடிப்படையில் மழை நீர் அகற்றும் பணிகள் - மாவட்ட ஆட்சியர்