தூத்துக்குடி: தமிழ்நாட்டில் உள்ள தீராத பிரச்னைகளில் ஒன்றாக மீனவர் பிரச்னை உள்ளது. நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் ஒருவித அச்சத்துடனே தான் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த பிரச்னை நீண்டகாலமாகத்தொடர்ந்தாலும் கூட இன்னும் தீர்வு காணப்படவில்லை. இலங்கை கடற்படையினரின் எல்லை மீறிய செயலால் தமிழ்நாடு மீனவர்கள் பல லட்சம் மதிப்பிலான வலைகள், மீன்களை இழந்து வருகின்றனர்.
இதற்கிடைடையே அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழ்நாடு மீனவர்களைத் தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா என்ற ரோந்து கப்பல் மூலம் நேற்று முன்தினம் அதிகாலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து 50 கடல் மைல் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 250 கடல் மைல் தொலைவிலும், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அந்த படகில் இலங்கை நிகாம்பு பகுதியைச் சேர்ந்த 1) மார்க்ஸ் ஜூட், 2) ஆண்டனி ஹேமா நிஷாந்தன், 3) இம்மானுவேல் நிக்சன், 4) துருவந்தா ஸ்ரீலால், 5) சுதீஷ் சியான் உள்ளிட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய கடலோர காவல்படையினர் இன்று(அக்.16) காலை தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் தமிழ்நாடு கடலோர காவல் குழும அலுவலர்களிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
பின்னர், மேல் விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு கடலோர காவல் குழும டிஎஸ்பி பிரதாபன், ஆய்வாளர் சைரேஸ், மற்றும் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களையும் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு!