தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் (32), தங்கச்செல்வன் (26), சின்னத்தம்பி (23), மகாராஜன் (31), சண்முகராஜன் (23), ராசுக்குட்டி (19) ஆகிய 6 பேரும் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, சாயர்புரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து சென்று, அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் துறையினரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில், சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் ரவுடிகள் ஆறு பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட ரவுடிகள் ஆறு பேரும் பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மணிகண்டன் மீது நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் மூன்று கொலை வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆத்தூரில் ஒரு கொலை வழக்கு என ஐந்து கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 20 வழக்குகள் உள்ளது. மேலும் இவர் மூன்று முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.
சின்னத்தம்பி மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கும் என மொத்தம் ஐந்து வழக்குகள் உள்ளன. மற்ற நபர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் என பல மாவட்டங்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சாயர்புரம் காவல் நிலைய காவல் துறையினர்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே தெருவில் அடுத்தடுத்து நடந்த 3 திருட்டு; சிசிடிவி காட்சி வெளியீடு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!