தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (57). இவர் தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்துப் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடசாமி வயது முதிர்வின் காரணமாக பணிமாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்துள்ளார். இதையடுத்து, அவருக்குத் திருநெல்வேலி பணிமனையில் பணி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி பணிமனையிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் ஒப்புதல் பெற கிளை மேலாளரிடம் அணுகியுள்ளார். ஆனால், மேலாளர் கடிதத்தில் கையெழுத்திடாமல் அலைக்கழித்துள்ளார். அதுமட்டுமின்றி இரவு பகலாக ஓய்வின்றி பணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடசாமி, நேற்றும் பணிமாறுதல் கடிதம் கேட்டு கிளை மேலாளரை அணுகியபோது அவர் தர மறுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துப் பணிமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தின் முடிவில், கிளை மேலாளர் அபிமன்யு, வெங்கடசாமிக்கு பணி மாறுதல் ஆணை கடிதம் வழங்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து அவர் சென்றார்.
இதையும் படிங்க: திடீரென தீப்பிடித்த இந்து முன்னணி நிர்வாகியின் கார்!