தூத்துக்குடி: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலமானார். இந்த நிலையில் இன்று (டிச.29) மாலை அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது தேமுதிக தொண்டர்கள், திரையுலகினர்கள் மற்றும் பொதுமக்கள் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சென்னை, அண்ணாசாலையீ உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்த நிலையில், விஜயகாந்த் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்வதற்காக சீமான் தூத்துக்குடியில் உள்ள வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "விஜயகாந்த் என்றாலே அச்சமின்மையும், துணிவும்தான். நான் பார்த்தவரை அவர் எதற்கும் பயப்படமாட்டார். எனக்கு நெருக்கமாக பழகும் வாய்ப்பு என்றால், அவர் நடித்த தவசி படத்தில் நான் தான் உரையாடல் எழுதினேன். அதனால், தவசி படத்தில் மூலம் அவருடன் பணியாற்றுவதற்கும், நெருக்கமாக பழகும் வாய்ப்பும் கிடைத்து. விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைப்போல ஒரு சிறந்த மனிதர் வருவது கடினம்.
திரையுலகின் உச்சத்துக்கு சென்றபோதும், அதனை தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டவர். திரையுலகில் இருந்து எல்லோருடனும் சமமாக பலகும் ஒருவர் என்றால் அது விஜயகாந்த் தான். அதனால் அவர் என்ன சொன்னாலும் அனைவரும் கேட்பார்கள். ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் கூட விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள். எல்லாரும் அதிகளவில் அவர் மீது பாசம் வைத்திருந்தார்கள். அதற்கு காரணம் அவரும் அதே அன்போடு நேசித்ததுதான் காரணம். அப்படி ஒருவரை இழந்திருப்பது என்பது எப்படி பார்த்தாலும் மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை.
விஜயகாந்த் மட்டும் நல்ல உடல்நலத்துடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறியிருக்கும். ஏனென்றால் அரசியலில் வந்து முதல் தேர்தலிலேயே ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும் போதே அரசியலுக்கு வந்து 10.5% விழுக்காடு வாக்குகள் வாங்கி, எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது என்பது சாதாரண விசயம் அல்ல. அவர் யாருக்கும் பயப்படமாட்டார். கடுமையான உழைப்பாளி, வெயில், மழை, பனி என பார்க்காமல் உறங்காமல் 3 நாள் 4 நாட்கள் கூட தூங்காமல் நடிப்பார்.
அந்த விஷயம் தமிழ் திரையுலகில் எந்த நடிகருக்கும் இருக்காது. அதையெல்லாம் தாண்டி ஆகச்சிறந்த மனிதர் அவர். அதை நல்ல மனிதர் என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது. பெரிய பண்பாளர், மிகவும் எளிமையாக இருப்பவர். படப்பிடிப்பில் அவர்கள் கொடுக்கும் உடையை அணிவாரே தவிர; மற்றபடி கதர்சட்டை, கதர் வேஷ்டிதான் அணிவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மிகவும் எளிமையாக சாதாரணமாக அனைவருடனும் உட்கார்ந்து சாப்பிடுவது, பேசுவது என இயல்பான மனிதர். திரையில் பார்க்கும் அந்த கம்பீரமான மனிதர் அல்ல, விஜயகாந்த் பார்க்கதான் கம்பீரமா இருப்பார், ஆனால் அவர் பேசி பழகுவது என்பது மனதளவில் அவர் ஒரு குழந்தைதான். இயற்கை எப்படி பேரிடர் தந்ததோ அதேபோல அவரது இழப்பும் நமக்கு ஒரு பேரிடர்தான்" என உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... அஞ்சலி செலுத்த கண்ணீருடன் குவியும் பொதுமக்கள்..!