தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை-மகன் ஜெயராஜ் (56), ஃபென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு வழக்கு விசாரண 13-07-2020க்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மனு மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணையை நேற்று மாலை 5 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து மாலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன் விசாரித்தார். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவானது மனுதாரர் தரப்பில் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் பிணை மனுவை இன்று மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சமய மாநாட்டில் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டவர்கள் ஹஜ் கட்டடத்திற்கு மாற்றம்!