தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் இருந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மேஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் சாட்சியளித்த சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் ரேவதி, ஜெயராஜ், பென்னிக்சை காவலர்கள் தாக்கியதாகவும், அவர்களது ரத்தக்கறை படிந்த லத்திகள் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, காவல் துறையினரால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், போலிஸ் காவலும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாத்தான்குளம் வழக்கில் முக்கிய சாட்சியான பெண் தலைமைக் காவலர் ரேவதி இன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார்.
சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான முக்கியத் தகவல்களை நீதிபதி முன்பு தலைமைக் காவலர் ரேவதி சாட்சியமளித்துள்ளார்.
இதையடுத்து தலைமைக் காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.