சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரணம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறை மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதன்படி, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்தரவிட்டிருந்தது. 159 ஆண்டு கால காவல் துறை வரலாற்றில் ஒரு காவல் நிலையம் இதுபோன்று வருவாய்த் துறையின் கீழ் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை.
இதனிடையெ பலத்த எதிர்ப்புகளுக்குப் பின் இவ்வழக்கைச் சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவல் துறையினரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சிபிஐ இந்த வழக்கைக் கையிலெடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்டவர்கள் தடயங்களை அழிக்கக் கூடும் என்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில், வழக்கு சம்பந்தமான ஆவணங்களை நெல்லை சரக டிஜஜி பிரவீன்குமார் அபினபுவிடம் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி மாற்றி, முக்கியக் குற்றவாளிகளாக இடைநீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய நால்வரையும் அவ்வழக்கில் சேர்த்தனர். இச்சூழலில் நேற்றிரவு ரகுகணேஷை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாகிய மற்ற மூவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி மூவரையும் ஜூலை 16ஆம் தேதி வரை தூத்துக்குடியிலுள்ள பேரூரணி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கொலை முயற்சி, நில ஆக்கிரமிப்பு - சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஸ்ரீதர்