தூத்துக்குடி: மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி விவிடி சிக்னல் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "மணிப்பூரிலே நடைபெற்றிருப்பது காட்டுமிராண்டித் தனமானது. கடந்த 3 மாத காலமாக மோடி அரசு மறைத்துவிட்டு இன்று நாடகமாடுகின்றார்கள். இந்த கொடுமை ஏன் நடைபெற்றது என்பதை ஒவ்வொரு தாய்மாரும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
மணிப்பூரில் இருக்கின்ற மலைகிராம குக்கி என்ற சொல்லக் கூடிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக கேட்டார்கள் என்பதற்காக, அங்கே இருக்கக் கூடிய பெண்களை கொடுமைப்படுத்தி, கேவலப்படுத்தி நினைத்துப் பார்க்கவே முடியாத நிலைமை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த பெண்களை நிர்வாணமாக்கி, நடுரோட்டிலே தம்பிக்கு முன்னால், கணவனுக்கு முன்னால், தந்தைக்கு முன்னால் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். கடந்த 2 மாதமாக மோடி அரசு இந்த செய்தியை மறைத்திருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் 28 ஆண்டு காலம் ராணுவத்திலே பணியாற்றினேன். என் தாய்நாட்டைக் காக்க எதிரை எதிர்த்து துப்பாக்கியைத் தூக்கி போராடினேன்.
ஆனால் என் கண் முன்னாலேயே எனது மனைவியை நிர்வானமாக்கி பாலியல் கொடுமை செய்தவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே என ராணுவ வீரர் மனமுடைந்து கூறினார். இது எதனால் நடைபெற்றது. அங்கு இருக்கும் அனைவரும் இந்துக்கள் தான்.
குஜராத்திலே முஸ்லிம் என்ற காரணத்தால், அந்த பெண் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் பாஜக நிர்வாகி பதைக்க, பதைக்க கற்பழிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அதேபோல, மணிப்பூரிலே கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தினால் குக்கி சமுதாய மக்களை நிர்வாணப்படுத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனை தட்டி கேட்ட தம்பியையும், தந்தையையும் கொலை செய்துள்ளனர். மேலும் சகோதரியையும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.
தற்போது மணிப்பூர் கலவரம் நடந்திருப்பது மத வெறியால் மட்டுமே. இதையெல்லம் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் நம் குரல் ஒலிக்க வேண்டும் என்ற சபதத்தை எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார். மேலும் 2024ல் பாஜக ஒழிய வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் பாஜாகவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: "திமுக கூட்டணி தர்மம் பார்த்தால் நல்லது செய்ய முடியாது" - சசிகலா குற்றச்சாட்டு!