தூத்துக்குடி: தசரா திருவிழாவுக்கு சிறப்பு பெற்ற தூத்துக்குடி மாவட்டம், 'குலசேகரன்பட்டினம்'. இனி விண்வெளி துறையிலும் தனி முத்திரையை பதிக்க உள்ளது. இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை தொடர்ந்து இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட இருப்பது தூத்துக்குடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
இந்த ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து அரைவட்ட வடிவில் இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான மாதவன் குறிச்சி, கூடல் நகர், அமராபுரம் மற்றும் பள்ளக்குறிச்சி, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் 2,376 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது. இதில், கிழக்கு கடற்கரை சாலையும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த இடத்தை சுற்றிலும் ரூ.6.24 கோடியில் சுற்றுச்சூழல் மற்றும் கம்பி வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதனால், கிழக்கு கடற்கரை சாலையானது மணப்பாடு, அமலாபுரம் வழியாக கருமேணியாற்றை கடந்து அழகப்பபுரம் வழியாக பெரிய தாழைக்கு செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக அமராபுரத்தில் கருமேணி ஆற்றுப்பாலத்தின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
ராக்கெட் ஏவுதளம் குலசையில் வர காரணம்: ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் 13.72 டிகிரி வட அட்ச ரேகையில் அமைந்துள்ளது. மேலும், இங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மீது பறந்துவிடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், கிழக்கு நோக்கித் திசை திருப்பப்படுகிறது. ஆனால், குலசையில் இருந்து ஏவும்போது திசை திருப்பிவிட வேண்டிய அவசியமில்லை. குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது.
மேலும், ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாதவாரும் புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக உள்ள இடமாகவும் இருக்க வேண்டும். மேலும், குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு கடற்கரையில் மணலும் பாறையும் கலந்த குன்று வளைவாக இயற்கையாக அமைந்து அரண் போன்று, நின்று புயல் போன்ற பேரிடரை தடுக்கக்கூடியதாக உள்ளது. இதனால், ராக்கெட் ஏவுதளத்துக்கு ஏற்ற இடமாக குலசேகரன்பட்டினம் விளங்குகிறது.
30 சதவீத எரிபொருள் சேமிப்பு: ஸ்ரீஹரிகோட்டாவே ஒப்பிடும்போது, குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்கலங்களை செலுத்தும்போது 30% எரிப்பொருள் மிச்சமாகும். மேலும், கூடுதல் எடையிலான விண்கலங்களையும் செலுத்த முடியும். நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவன மையத்திலிருந்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருள் எஞ்சின் போன்றவற்றை சாலை மார்க்கமாக என்றால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதுவே, குலசேகரன்பட்டினத்துக்கு என்றால் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில்தான் இதன் மூலம் குலசேகரன்பட்டினத்திற்கு எரிபொருள் போன்றவற்றை எளிதாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டுவர முடியும்.
விண்வெளி கேந்திரமாகும் தமிழகம்: கடந்த 1960 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரையில் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சில காரணங்களால் கைவிடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் இரண்டாவது மற்றும் தமிழகத்தின் முதல் ராக்கெட் ஏவுதளம் என்ற அந்தஸ்த்தை குலசேகரன்பட்டினம் பெறுகிறது. சமீபகாலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களையும் வணிக ரீதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறது.
ஏற்கனவே, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் முடியும்போது புதிய செயற்கைக்கோள்களை செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, முதல் கட்டமாக குலசேகரன்பட்டினத்தில் இருந்து சிறிய வகை செயற்கைக்கோள்களை அதிக அளவில் செலுத்த திட்டமிட்டுள்ளனர். பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால் ராக்கெட் ஏவுவதற்கு சிறந்த இடமாக தமிழக கடற்கரை விளங்குகிறது. எனவே, எதிர்காலத்தில் வாலிநோக்கம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் ராக்கெட் ஏவுதளங்கள் அமைய வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேலைவாய்ப்புகள் பெருகும்: குலசேகரன்பட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் அண்மையில் கூறியுருந்தார். அப்போது அவர் கூறியதாவது, 'குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் அந்த பகுதியில் தயாரிக்கக்கூடிய பல தொழில் நிறுவனம் புதிதாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
140 தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை செலுத்த விருப்பம்: இதன்மூலம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். விண்வெளி துறையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் விண்ணில் செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற நிறுவனங்களுக்கு அவை என்ன நோக்கத்திற்காக செயற்கைக்கோள்களை செலுத்த விரும்புகின்றனர் என்பன போன்ற விவரங்களை இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் மையம் தெரிந்துகொண்டு அதன்பிறகு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும். இதுவரை 140-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறது' என்றார், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன்.
மேலும், இதுகுறித்து நேற்று இஸ்ரோ தலைவர் சோம்நாத், 'குலசேகரபட்டினத்தில் நடைபெற இருக்கும் பணிகளுக்கு அனுமதி பெறுதல், மின் இணைப்பு பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, 'கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் உள்ளது. அங்கிருந்துதான் ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது.
குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி ஆரம்பம்: திரவ என்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்பின், அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்போது தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. சில பணிகளுக்கு அனுமதி பெறுதல், மின் இணைப்பு பெறுதல், கட்டுமானப் பணி போன்றவை நடக்க வேண்டியுள்ளது. இதற்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும்.
குலசேகரன்பட்டினத்தை தேர்வு செய்யக் காரணம்: ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கை தீவு இருப்பதால் அங்கிருந்து ஏவப்படும் அனைத்தும் இலங்கை தீவைச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால், சிறியவகை ராக்கெட்களை அங்கிருந்து ஏவுவதற்கு சிரமமாக உள்ளது. இவற்றை ஏவுவதற்கு தென்பகுதிதான் சிறந்தது. அதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து சிறியவகை ராக்கெட்டுகளை ஏவ முடியும்' என்று நம்பிக்கை கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரோ மைய ஊழியர்கள் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக கூடல் நகர் மெயின் ரோட்டில் உள்ள கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனியார் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த கட்டிடத்தையும் தற்போது இஸ்ரோ கையகப்படுத்த உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 40 பேரை பலி வாங்கிய பட்டாசு வெடி விபத்துகள்.. நடந்தது என்ன?