மதுரை - தூத்துக்குடி வரையிலான 160 கி.மீ. தூரத்துக்கு இரண்டாவது ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் கீழ், கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 2ஆவது தண்டவாளம் அமைக்கும் பணிகளை செய்துவருகிறது.
தற்போது கடம்பூரில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக, தட்டப்பாறை வரையிலான 35 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரயில் தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தட்டப்பாறை ஆகிய ரயில் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, கட்டுப்பாட்டு அறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த கடம்பூர் முதல் வாஞ்சி மணியாச்சி வரை சுமார் 11 கி.மீ. தூரம் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், ரயில்வே கட்டுமான நிர்வாக தலைமை அலுவலர் சின்ஹா மற்றும் அலுவலர்கள் டிராலிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று காலை வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையில் அலுவலர்கள் டிராலியில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், வாஞ்சி மணியாச்சி, தட்டப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து வாஞ்சி மணியாச்சியில் இருந்து தட்டப்பாறை வரை வெள்ளோட்டம் நடந்தது. இதன் தொடக்கமாக ரயில் இன்ஜினுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு தண்டவாளத்தில் எலுமிச்சம்பழம் வைத்து தேங்காய், பூசணிக்காய் உடைக்கப்பட்டன.
தொடர்ந்து நேற்று மாலை 4.49 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டப்பாறை ரயில் நிலையத்தை 11 நிமிடத்தில் சென்றடைந்தது.
பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை சமர்பித்த பின்னர், ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும். முதலில் சரக்கு ரயில், பயணிகள் ரயில், அதற்கு அடுத்தாக விரைவு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப் பணிகள் - விரைவில் முடிக்க நடவடிக்கை!