தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர், ராபர்ட் பெல்லார்மின் மகன் காமராஜ் ஞானமணி (38).
இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீட்டிற்குள் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி, இருசக்கர வாகனம் மூலம் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது இரண்டு ஆடுகளும் கத்தி விட ஞானமணி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆடுகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தனர்.
இதன் பின் கிராமத்தினர் அவர்களுக்கு தர்ம அடிகொடுத்து பெரியசாமிபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறைப்பிடித்து வைத்தனர்.
பின்பு, சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த கனி மகன் செந்தில்குமார் (36) மற்றும் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் கருப்பசாமி (46) என்பது தெரியவந்தது.
வாகனம், ஆடுகள் பறிமுதல்
இதையடுத்து, சூரங்குடி காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
ஏற்கெனவே, இருவர் மீதும் திருச்செந்தூர் மற்றும் ஆத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளும், திருடப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரியசாமிபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பகல் நேரங்களில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போன நிலையில், நேற்று ஆடு திருடர்கள் இருவர், மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 22 வயதில் பஞ்சாயத்து தலைவர் பதவி - என்ன செய்ய போகிறார் ஸாருகலா?