தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தினர், தங்களது கிராமத்திற்கு 3 Phase மின் சப்ளை விநியோகம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என இன்று (நவ.28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்களது கிராமத்திற்கு புதுக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக 3 பேஸ் மின் சப்ளை முறையாக வருவதில்லை. காலை 9.00 மணியில் இருந்து பிற்பகல் 2.00 மணி வரையும் இரவு 11.00 மணியில் இருந்து அதிகாலை 5.00 மணி வரையிலும் 3 Phase மின் சப்ளை உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. சில நேரம் அதுவும் இல்லை.
மேலும், 10 நாட்களுக்கு ஒருமுறை பகலில் முழு நேர 'மின்தடை' என்று சொல்லி, மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் கிராமத்தில் விவசாயம், சிறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. பகலில் 5 மணி நேரமும் இரவில் 5 மணி நேரமும் மட்டும் 3 Phase மின் சப்ளை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் காற்றாலை உற்பத்தி தேவைக்கு அதிகமாக கிடைக்கிறது.
ஆனால், இங்கு மும்முனை மின் சப்ளை இருப்பதில்லை. இரவில் தோட்ட வேலை செய்ய இயலாது. பகலில் சிறு தொழில் நிறுவனங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தினால், சிறு குறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள். வேலை செய்யும் கிராம மக்கள் மற்றும் போதிய விவசாய உற்பத்தியின்மை, வறுமை ஆகியவற்றின் பிடியில் சிக்கி வருகின்றார்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகங்களில் இருந்தும் முறையான தகவலும் கிடைப்பதில்லை. எனவே, அரசு இந்த விவகாரங்களில் தலையிட்டு, முறையான மின் விநியோகத்தை முழு நேரமும் 3 பேஸ் என்று மின் சப்ளை கிடைக்க ஆவண செய்யவேண்டும். இல்லையெனில் மாறாக, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: ‘ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின்கட்டணம் செலுத்தலாம்’ - செந்தில் பாலாஜி