தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். அதுபோல் தூத்துக்குடி விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரியசாமி புரத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக அங்கு வந்திருந்தனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தினுள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை சமரசம் செய்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கூறினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "எங்களது ஊரைச் சுற்றி உப்பளங்கள் உள்ளன. இதனால் எங்களின் நீர் ஆதாரம் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளது. இது தவிர மேலும் புதிதாக உப்பளம் அமைக்கும் பணிகளில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்க நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எங்கள் ஊரில் குடியிருப்புகளைச் சுற்றிலும் உப்பளங்கள் அமைப்பதினால் நிலத்தடி நீர் மாசடைந்து உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. மேலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீர்மட்டம் குறைந்து வறண்டு போய்விடுகிறது. ஆகவே, குடியிருப்பை ஒட்டி புதிதாக உப்பளங்கள் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்" என்றனர்.