தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் வேலாயுதபுரம் தெரு பகுதியில் சப்பரம் சுற்றி வருவது வழக்கம். இதற்காக அப்பகுதியில் உள்ள தெருவில் இருக்கும் மரங்கள் சப்பரம் செல்ல வசதியாக சீரமைக்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்க இருப்பதால், வேலாயுதபுரம் தெருக்களில் இருக்கும் மரங்களை திடீரென ஜேசிபி இயந்திரத்தை வைத்து அகற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் நேற்று நள்ளிரவு ஈடுபட்டனர். மரங்களை சீரமைக்காமல் அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் குழந்தை போல் வளர்த்து வரும் மரங்களை முற்றிலுமாக அழிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி மரங்களை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தாசில்தார், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மரங்களை வெட்டுவதற்கு தடையும் விதித்தனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.