தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் விவிடி சிக்னல் அருகே சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் பங்கேற்று பேசியிருந்தனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தினர், இன்று காலையில் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இத்தகவல் அறிந்து பல்வேறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட அமைப்பை சேர்ந்தவர்களும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கூடினர்.
கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி மீது பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு அவதூறாக பேசுதல்(504), வெவ்வேறு மதத்தினருக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் படி அவதூறு பரப்புதல்(505), மிரட்டுதல்(506), சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல்(143) உள்ளிட்ட பிரிவுகள் போடப்பட்டுள்ளதால் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கடும் போராட்டங்களை முன்னெடுக்கலாம் என அச்சம் பரவியுள்ளது.
இதையும் படிங்க: 2021இல் எல்லாம் மாறும் - ஸ்டாலின் நம்பிக்கை